ஐயா ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல; இது ஒரு கேலிக்கூத்து. பொதுக்குழுவை பாமக தலைவர் அன்புமணி மட்டுமே கூட்ட முடியும் என்று அன்புமணி தரப்பை சார்ந்த வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாமகவில் அனைத்து அதிகாரமும் ராமதாஸுக்கு தான் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணி முதுகில் குத்தி விட்டார்
இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''அன்புமணி தனது முதுகிலும், மார்பிலும் குத்தி விட்டார். சில்லறை பையன்களை வைத்து அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார். அன்புமணி பக்கம் இருக்கும் கும்பல் என்னையும், ஜி.கே.மணியையும் அவதூறாக பேசுகிறது. 95% பாமகவினர் என் பக்கம் தான் உள்ளனர். அன்புமணி பக்கம் வெறும் 5% தான் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டும். அவருக்கு காலம் பதில் சொல்லும்'' என்று கூறினார்.
ராமதாஸ் தரப்பு நடத்தியது கேலிக்கூத்து
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு நடத்தியது பொதுக்குழு அல்ல; கேலிக்கூத்து என்று அன்புமணி தரப்பை சார்ந்த வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஐயா ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல; இது ஒரு கேலிக்கூத்து. பொதுக்குழுவை பாமக தலைவர் அன்புமணி மட்டுமே கூட்ட முடியும். ஆகவே ராமதாஸ் தரப்பு பொதுக்குழு எடுத்த முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது.
ராமதாஸை பொம்மை போல் ஆக்கி விட்டனர்
ஒரு கட்சியின் தலைவர், நிறுவனர் பேசாத பொதுக்குழு இதுவாகத்தான் இருக்க முடியும். பசிக்கிறது என்று கூறி பொதுக்குழுவில் யாரும் பேசாமல் சென்று விட்டனர். ஆகவே இது கேலிக்கூத்தான, காமெடியான பொதுக்குழுவாகும். ஐயா ராமதாஸை ஒரு பொம்மை போல் வைத்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஜி.கே.மணி தான். அவர் ஐயா ராமதாஸை அவமானப்படுத்துகிறார்.
ராமதாஸ் பொதுக்குழு செல்லாது
பொதுக்குழுவில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவரை எப்படி நீக்க முடியும்? நாங்கள் ஏற்கெனவே நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆகவே அவர்கள் நடத்திய பொதுக்குழு செல்லாது'' என்று கூறியுள்ளார்.


