பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி மேடையிலேயே கண்ணீர் சிந்திய நிலையில், உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் அவரை அழாதீர்கள் என்று கோஷம் எழுப்பி தேற்றினர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “100க்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5% மக்கள் கூட இல்லை. நான் வளர்த்தப்பிள்ளைகளே என்னை தூற்றுகிறார்கள்.
தூக்கமாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றால் கூட அன்புமணியின் நினைப்பு வந்துவிட்டால் தூக்கம் வருவதில்லை. கனவில் வந்த எனது தாயாரிடம் நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி கதறி அழுதேன் என மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். அதனைப் பார்த்த தொண்டர்கள் உடனடியாக அவரை தேற்றினர். மேலும் அழாதீர்கள், அழாதீர்கள் என கோஷம் எழுப்பினர்.
நான் பொறுப்பு கொடுத்தப் பிள்ளைகள், இன்று என்னை தூற்றுகிறார்கள். ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்னவெல்லாம் செய்வாரோ, அதைவிட அதிகமாகவே செய்திருக்கிறேன். ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனாலும் சில்லறைப் பசங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார்.
அரசியலில் எந்த பொறுப்பும் வகிக்க மாட்டேன் என்று நான் செய்த சத்தியத்தை இன்று வரை நான் காப்பாற்றி வருகிறேன். நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்தப் பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சரானாய்.
கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை. நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.


