மகன் அன்புமணியை வெளியே போகச் சொல்லும் அளவுக்கு முகுந்தனுக்கு முக்கியத்துவம்! யார் இவர் தெரியுமா?
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்த மோதல் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அதாவது பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவிக்காக முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: வீதிக்கு வந்த அப்பா மகன் சண்டை: மேடையிலேயே மோதிக் கொண்ட அன்புமணி, ராமதாஸ் - உடைகிறதா பாமக?
அப்போது அருகில் இருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம். மேலும் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பதா என கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவுகளை நான் தான் எடுப்பேன் என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அன்புமணி குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கும் பதவி கொடுங்கள் என காட்டமாக தெரிவித்து மைக்கை தூக்கி போட்டார். பதிலுக்கு பேசிய ராமதாஸ் நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்றும், விருப்பம் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று ஒரே போடாக போட்டார். இதனால் கடுப்பான அன்புமணி பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருக்கிறேன். என்னை அங்கே வந்து சந்திக்கலாம் என்று கூறிவிட்டு தொலைபேசி எண்ணை மேடையிலேயே தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுமை பெண் திட்டம்! லட்டு மாதிரி வந்த சூப்பர் அறிவிப்பு! குஷியில் மாணவிகள்!
மகன் அன்புமணியை வெளியே போகச் சொல்லும் அளவுக்கு முகுந்தன் பரசுராமன் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மூன்றாவது மகன் முகுந்தன். இன்ஜினியரிங் படித்துள்ள இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். கடந்த 3 மாதங்களாக பாமக கட்சிப்பணியில் உள்ளார். பாமக சமூக ஊடகப் பேரவையின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்த முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததால் ராமதாஸ் அன்புமணி இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாமக இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.