பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு கட்சியில் பிளவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வட தமிழ்நாட்டில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தற்போது நடைபெற்று வரும் உள்கட்சி குழப்பம், அதன் தொண்டர்களிடையே பெரும் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.
பாமகவில் உள்ள குழப்ப நிலை
ஒருகாலத்தில் குடும்ப அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுத்த ராமதாஸ் தலைமையிலான பாமக, இன்று அதே குடும்ப அரசியலில் சிக்கியுள்ளது. தந்தையும் மகனுமான ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு, கட்சியில் பிளவுக்கான காரணமாக மாறும் முன் நிறுத்த முயற்சிகள் தொடர்கின்றன.
ராமதாஸ் கொடுத்த பதில்
திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பூம்புகார் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி வரலாம். நடத்தும் போராட்டத்தில் யார் எனது சார்பாக கலந்துகொள்வார்கள் என்பது பின்னர் தெரியும். இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துகள்; நல்ல நோக்கில் செயல்பட்டால் வாழ்த்த வேண்டும்,” என கூறினார்.
இதேவேளையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், வன்னியர் சமூகத்துக்காக 10.5% இடஒதுக்கீடு கோரி, விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. “காந்தி 32 ஆண்டு போராடி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.
45 ஆண்டுகாலம் போராட்டம்
ஆனால், அய்யா (ராமதாஸ்) 45 ஆண்டு காலம் போராடியும் இந்த சமூகத்திற்கு விடுதலை கிடைக்கவில்லையே” என்று வன்னியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு அளிக்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெறும் கூட்டத்தில் அன்புமணி பேசியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘சமூகநீதி துரோகி திமுக’ என்ற பதாகைகளை பாமக தொண்டர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


