சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..
இரண்டு நாள் பயண்மாக சென்னை வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு கருதி, சென்னையில் பலூன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ககந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, போட்டியைத் தொடக்கி வைக்கிறார். மேலும் அன்று தமிழக ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, மறு நாளான ஜூலை 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக் கழகம், ஐஎன்எஸ் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், பிரதமர் மோடி நாளை மறுதினம் மாலை 4.45 மணிக்கு சென்னையை வந்தடைகிறார்.
மேலும் படிக்க:வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு வரும் அவர், சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு கருதியும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும், சென்னையில் இரு நாள்கள் ஜூலை 28,29 ஆம் தேதிகளில் டிரோன்கள்,சிறிய வகை ஆளில்லாத விமானங்கள்,பாரா சூட்டுகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல காற்று பலூன்கள், 'கியாஸ்' பலூன்கள் பறக்க விடுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த 4 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிற்கு சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். அந்த பலூன்கள் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீது மோதுவது போல சென்றதால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே தற்போது இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, சென்னையில் முதல் முறையாக பலூன்கள் பறக்க விடுவதற்கும், அதிகாரபூர்வமாக தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க:சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிட்டால் கைது.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!