பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. 

ஆபரேஷன் சிந்தூர்

இன்று நள்ளிரவு முதல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே பரபரப்பாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் தான். பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளின் 9 இடங்களில் குறிவைத்து இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை பாகிஸ்தான் தரப்பு மறுத்து வருகிறது. 

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு 

இந்நிலையில் இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எக்ஸ் தளத்தில்: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் - தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி 

OPERATION SINDOOR எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் உட்கட்டமைப்பை சிதைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.