2024 மக்களவை தேர்தல்: தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி? - கோவையா? குமரியா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு தொகுதி மற்றும் அவரது சிட்டிங் தொகுதியான வாரனாசி ஆகிய இரண்டு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இருந்து போட்டியிடும் முன்மொழிவானது பாஜகவின் மிஷன் சவுத்தை முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 2024 தேர்தலில் தென் மாநிலங்கள் மீது பாஜக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக மிஷன் சவுத் எனும் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மோடி தமிழகத்திலும் போட்டியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவரது காசி-தமிழ் சங்கமம் முன்முயற்சி தமிழகத்துடனான அவரது தொடர்பை வலுப்படுத்த உதவியது.” என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் போட்டியிட்டால், காசிக்கும் - கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள வலுவான கலாச்சார தொடர்பு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். காசி மற்றும் கன்னியாகுமரியில் போட்டியிடுவது பிரதமருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என பாஜகவைப் பற்றி ஆழமான புரிதல் கொண்ட மற்றொரு அரசியல் பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கன்னியாகுமரிக்கு பதிலாக கோயம்புத்தூரில் பிரதமர் மோடி களமிறங்குவார் என்றும் ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த இரண்டு தொகுதிகளிலுமே பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கொங்கு பெல்ட்டான கோவையில் செந்தில் பாலாஜி வரவுக்கு பின்னர் பாஜக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, எப்படியாவது அங்கு திமுகவின் செல்வாக்கை குறைக்க அந்த இரு கட்சிகளுமே முயற்சி செய்தி வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது, கோவையில் பிரதமர் மோடி களமிறங்கும் தகவல் என இரண்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ எனவும் அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன், 2021 மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்துக்கு கடும் போட்டியாக திகழ்ந்தார். அந்த தேர்தலில் பாஜக 4,38,087 வாக்குகளும், காங்கிரஸ் 5,76,037 வாக்குகளும் பெற்றன. அதற்கு முந்தைய 2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் 627,235 வாக்குகளும், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 367,302 வாக்குகளும் பெற்றனர்.
ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!
கோவையை பொறுத்தவரை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பாஜகவின் வானதி சீனிவாசன் உள்ளார். 2019 மக்களவை தேர்தலில் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளைப் பெற்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிஆர் நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்றி வெற்றி பெற்றார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிடவுள்ளார் என்ற தகவல் இதற்கு முன்பும் கிசுகிசுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வாரணாசியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும். அதில் ஒன்று தமிழகத்தின் ராமநாதபுரம் என்றும் தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாஜக ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே, பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் கூடுதல் கவனம் பெற்று பாஜகவின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதேசமயம், மூன்றாவது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வாரும் காலங்களீல் தமிழத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.