ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!

ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதித்து வருகிறது

Congress mum on chief ministerial face in rajasthan

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலை சுமூகமாக சந்தித்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது.

அந்த வகையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவும் மோதலைத் தீர்க்கும் முயற்சியாக, அம்மாநில மூத்த தலைவர்களுடன் தேர்தலுக்கு தயாராவது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம்; ராஜஸ்தானில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க நாங்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. மேலும், கட்சித் தலைவர்கள் அடுத்த 90 நாட்களில் மக்களுடன் கலந்துரையாடி கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, சச்சின் பைலட், ராஜஸ்தானை சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் காலில் காயம் அடைந்த காரணத்தால் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வீடியோ கன்ஃபரன்சிங் மூலம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கேசி வேணுகோபால், “நாங்கள் முதல்வர் வேட்பாளரை ஒருபோதும் அறிவிக்க மாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி தேர்தலை ஒற்றுமையுடன் சந்திக்கும்.” என்றார். மேலும், கட்சிக்குள் இருக்கும் குறைகளை கட்சிக்குள் வைத்துக்கொள்ளுமாறும்; ஊடகங்களிடம் பேச வேண்டாம் எனவும் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் முடியும் வரை முதல்வர் பதவி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருக்க காங்கிரஸ் மேலிடம் உத்தேசித்துள்ளதாக, “சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி: டெல்லியில் முக்கியக் கூட்டம்!” என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்துள்ளது.

ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட தயாராக இருப்பதாகவும், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரைவில் ராஜஸ்தான் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கேசி வேணுகோபால் அப்போது தெரிவித்தார்.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக அவர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு செயலற்றதாக இருக்கிறது என அண்மையில் சச்சின் பைலட் குற்றம் சாட்டியிருந்தார்.

ரயில் பயணத்தின் புதிய சகாப்தம் : மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..

ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (ஆர்பிஎஸ்சி) கலைக்கப்பட வேண்டும். அது மறுசீரமைக்கப்பட வேண்டும். அரசுப் பணித் தேர்வுத் தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முந்தைய பாஜக அரசுக்கு எதிராக தான் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேரணி ஒன்றயும் அவர் நடத்தினார்.

ஆனால், அசோக் கெலாட் இந்த விவகாரத்தில் மவுனமாகவே இருந்தார். ஆனால், ராஜஸ்தான் தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வுத் தாள் கசிவுகளில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையின் அளவை 10 ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனையாக அதிகரிக்க ராஜஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான மசோதா அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என அசோக் கெலாட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios