சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி: டெல்லியில் முக்கியக் கூட்டம்!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள முக்கிய கூட்டதில் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலை சுமூகமாக சந்தித்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அசோக் கெலாட் - சச்சின் பைலட் மோதல்களுக்கு இடையே சிக்கித் தவித்து வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு முக்கியமான கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, மாநில கட்சி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா உட்பட ராஜஸ்தான் காங்கிரஸின் பெரும்பாலான முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு அளிக்கப்படும் இறுதிப் பொறுப்பு மற்றும் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்லது பிரசாரக் குழுவின் தலைவராக சச்சின் பைடல் நியமிக்கப்படலாம் என்ற சலசலப்புகளும் கேட்கின்றன. டெல்லிக்கு வந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவியை ஏற்குமாறு சச்சின் பைலட்டை காங்கிரஸ் தலைமை பலமுறை கேட்டுக் கொண்டும், அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். அதேசமயம், அவரை துணை முதல்வர் அல்லது கட்சித் தலைவராக்கும் அனைத்தும் முயற்சிகளையும் அசோக் கெலாட் முகாம் எதிர்த்து வருகிறது.
அம்மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி ராஜஸ்தான் காங்கிரஸில் ஒற்றுமையை ஏற்படுத்தவே காங்கிரஸ் விரும்புகிறது. எனவே, அவர்கள் இருவருக்கும் இடையேயான மோதலை தடுப்பது அக்கட்சித் தலைமையின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில் காலில் காயம் அடைந்த காரணத்தால் இன்றைய கூட்டத்தில் அசோக் கெலாட் கலந்து கொள்வரா என்பது உறுதியாக தெரியவில்லை.
டெல்லி கூட்டத்தை பற்றி நன்கு அறிந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தேர்தல் முடியும் வரை முதல்வர் பதவி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருக்க காங்கிரஸ் மேலிடம் உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சச்சின் பைலட்டை சமாதானப்படுத்துவதே இப்போதைய முதன்மை கவனம். எனவே, அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?
இந்த கூட்டத்தில், அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பை சச்சின் பைலட் ஏற்குமாறு வலியுறுத்தப்படலாம் என்கிறார்கள். ஆனால், அதுபோன்ற நிர்வாக பதவிகள் வேண்டாம் என்பதிலும், ராஜஸ்தானில் கீழே இறங்கி வேலை பார்க்கவே தயாராக இருப்பதாகவும் சச்சின் பைலட் ஏற்கனவே திட்டவட்டமாக தெளிவுபடுத்தி விட்டார். எனவே, துணை முதலமைச்சராக மீண்டும் தொடர சச்சின் பைலட்டை உயர்மட்டக்குழு வற்புறுத்த வாய்ப்புள்ளது. ஆனாலும் அதிலும் கூட சிக்கல்கல் உள்ளன. சச்சின் பைலட்டை துணை முதல்வராக்கினால், முழு அமைச்சரவையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டியிருக்கும். மேலும், ஆட்சி முடியும் தருவாயில் துணை முதல்வர் பதவியை சச்சின் பைடல் ஏற்பாரா என்பதும் சந்தேகமே. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, இத்தகைய நடவடிக்கை எடுப்பதும் முரணாக இருக்கும்.
அதேசமயம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு மீண்டும் சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்கப்படலாம் என சில கட்சித் தலைவர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால், அசோக் கெலாட் அதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் முதல்வர் பதவியை கைபற்றுவதற்காக அசோக் கெல்லாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசோக் கெல்லாட்டுக்கு முதல்வர் பதவியை கட்சி மேலிடம் அளித்தது. சச்சின் பைலட் துணை முதல்வரானார்.
இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரின் விளைவாக சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதையடுத்து, புதிய தலைவராக கோவிந்த் சிங் தோடஸ்ரா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அசோக் கெல்லாட்டின் அரசு மைனாரிட்டி அரசு என்று கூறி பரபரப்பை கிளப்பிய சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கினர். அதன் தொடர்ச்சியாக, குழு ஒன்றை அமைத்து ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவி வந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ் மேலிடம். சச்சின் பைலட்டின் குறைகள் தீர்த்துவைக்கப்படும் என கட்சி மேலிடம் அவரிடம் உறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை எந்த முன்னேற்றமும் அதில் ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசுகையில், “ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த போதே, சச்சின் பைலட்டின் பெயரும் அடிபட்டது. ஆனால், இன்று வரை அவர் காங்கிரஸிலேயே இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் இளையவர்கள் பலர் வெளியேறிய நிலையில், அக்கட்சியின் தலைமைக்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். கடந்த முறையும் கூட, கடைசி வரை பிடிவாதம் பிடிக்காமல் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார். அதேசமயம், அசோக் கெலாட்டும் வயது முதிர்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக முதல்வர் பதவியை அவர் அலங்கரித்து விட்டார். இளையவர்களுக்கு அவர் வழிவிட வேண்டும். மேலும், சச்சின் பைலட்டுக்கு அக்கட்சி மேலிடம் குறைந்தபட்ச முக்கியத்துவதையாவது அளிக்க வேண்டும்.” என்கிறார்கள்.