ஊழல் மிக்க திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவை தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் சென்னையில் பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் அக்கட்சி பொறுப்பாளர்களுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
பாஜக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பில் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பாஜக சார்பில் பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது தேர்தலுக்கு எப்படி தயாராவது எப்படி? என்னென்ன வியூகங்களை வகுக்க வேண்டும்? என்பது குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு முடிந்த பிறகு பியூஸ் கோயலும், எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய பியூஸ் கோயல், ''அருமை நண்பர், சகோதரர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுக, பாஜக இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி.
ஊழல் திமுக ஆட்சி அகற்றப்படும்
ஊழல் மிக்க திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவை தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். தமிழகத்தில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்வோம்'' என்றார்.
இபிஎஸ் சொல்வது என்ன?
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''நீண்ட நாட்களுக்கு பிறகு பியூஸ் கோயலை சந்தித்து பேசியுள்ளேன். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தமிழகத்தின் கள அரசியல் நிலவரங்கள் குறித்து பியூஸ் கோயலிடம் எடுத்துரைத்தோம். தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்'' என்று தெரிவித்துள்ளார்.


