கரூரில் ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
கரூர் மாவட்டத்தில் சோதனையிடச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் 9 இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனையில் நடத்தப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர்.
அவர்கள் அதிகாரிகளின் காரை தடுத்து நிறுத்தி, கார் கண்ணாடியை உடைத்ததுடன், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. திமுக தொண்டர் ஒருவரையும் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு இரு தரப்பிலும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள், வங்கிக்கணக்கு முடக்கம்.. அமலாக்கத்துறை நடிவடிக்கை
இந்நிலையில், வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கொங்குமெஸ் சுப்ரமணி, செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கும்பலாகச் சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறித்துச் செல்லுமாறு செல்வராஜிடம் சுப்ரமணி கூறியது ஆடியோ மூலம் உறுதியாகிறது. இதை ஆதாரமாக காவல்துறையில் சமர்பிப்போம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது - சீமான் கருத்து
இந்தப் பொதுநல மனுவை அவசர வழக்காகக் கருதி விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.