Asianet News TamilAsianet News Tamil

திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட நீதிகட்சி… பெரியாரின் பங்கு என்ன? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் அதில்  பெரியாரின் பங்கு குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

periyar role in justice party and dravidar kazhagam
Author
First Published Sep 16, 2022, 7:12 PM IST

நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் அதில்  பெரியாரின் பங்கு குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. அரசு அதிகாரங்களிலும் சமூகத்திலும் தங்கள் செல்வாக்கைக் கோலோச்சி வந்த பிராமணர்களுக்கு இணையாக பிராமணரல்லாதோரும் உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரப் பங்கும் பெறுவதைக் கனவாகக் கொண்டு இயங்கியது நீதிக் கட்சி. சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1916 ஆம் ஆண்டு மருத்துவர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. (1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு தமிழ் சமூகத்தின் சீர்திருத்த இயக்கமாக பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆட்சியதிகாரத்தில் நம்பிக்கை கொண்டிராமல் சமூகச் சீர்திருத்தத்தில் கவனம் குவித்தது. 

இதையும் படிங்க: ”பெரியார் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!

எப்படியும் பிராமணரல்லாதோர் சம உரிமை பெறுவதை இலக்காகக் கொண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்துவந்த இந்த இரு அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையை நீதிக் கட்சி பலவீனமடைந்த சூழல் உருவாக்கியது. 1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றபிறகு இந்தி கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938 இல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!

1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. பெரியாரின் தலைமையின் கீழ் சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சி ஒன்றிணைந்து புது உருவம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது தான் திராவிடர் கழகம் உருவானது. பெரியார், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நீதிக்கட்சி என்ற பெயரை 1944 இல் திராவிட கழகம் என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும். கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம் என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios