தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை 'நோயாளிகள்' என்பதற்குப் பதிலாக 'மருத்துவப் பயனாளிகள்' என்று அழைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக வருபவர்களை இனி 'நோயாளிகள்' (Patients) என்று அழைக்காமல், 'மருத்துவப் பயனாளிகள்' (Medical Beneficiaries) என்று குறிப்பிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
மருத்துவப் பயனாளிகள்
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், "மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் 'நோயாளிகள்' என்று அழைக்கப்படாமல், 'மருத்துவப் பயனாளிகள்' என்று குறிப்பிடப்பட வேண்டும்" எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் என்பது ஒரு மனிதநேயமிக்க சேவையாக உள்ளதால், 'நோயாளி' என்ற சொல்லைத் தவிர்த்து 'பயனாளி' என குறிப்பிடுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், "மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடனும், பரிவுடனும் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
