உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை ஆதிக்க மனப்பான்மை ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே இது காட்டுவதாக கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று காலை வழக்கம்போல் கூடியபோது மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலையை சீரமைக்கக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி
இந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறிய கருத்துகளால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அவர் மீது காலணியை வீச முயன்றுள்ளார். நீதிமன்ற காவலர்கள் அவரை உடனடியாக மடக்கிப்பிடித்து அங்கிருந்து வெளியேற்றினார்கள். அப்போது ராகேஷ் கிஷோர், ''சனாதன தர்மத்துக்கு அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக் கொள்ளாது'' என்று கூறியபடி வெளியே சென்றார். இதுபோன்ற சம்பவங்கள் தன்னை பாதிக்காது என்றும் தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன் என்றும் பி.ஆர். கவாய் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் மீது உச்சநீதிமன்றத்தினுள் நடத்தப்பட்ட வெட்கக் கேடான தாக்குதல் என்பது நமது ஜனநாயகத்தில் நீதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.
நீதித்துறையின் வலிமை
இது மிகக் கடுமையான கண்டனத்துக்குரிய செயல். அமைதியாகவும் கருணையோடும் பெருந்தன்மையோடும் மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியது நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது. எனினும், இத்தாக்குதலை நாம் சாதாரணமானதாகக் கருதலாகாது.
அடக்குமுறை ஆதிக்க மனப்பான்மை
தாக்குதலை நடத்தியவர் அதற்குக் கூறிய காரணம், நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை ஆதிக்க மனப்பான்மை எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரு சமூகமாக, நமது மக்களாட்சியின் நிறுவனங்களை மதிக்கும், பாதுகாக்கும் பண்பையும்; நடத்தையில் முதிர்ச்சியை நடத்தையில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் போக்கையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்'' என்றார்.
