பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சென்னை - கொழும்பு விமானத்தில் பயணித்ததாகக் ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு விமானத்தில் இலங்கை போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சென்னை - கொழும்பு விமானத்தில் பயணித்ததாகக் ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு விமானத்தில் இலங்கை போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

இது குறித்து இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 11:59 மணிக்கு வந்து சேர்ந்ததாகவும் விமானம் வந்தவுடன் விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் தேடப்படும் ஒரு சந்தேக நபர் விமானத்தில் இருப்பதாக சென்னை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் உள்பட ஐந்து பயங்கரவாதிகளை இந்திய உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது.

ஏப்ரல் 24ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் தண்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்தார். நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் மீதான இந்தத் தாக்குதல் இந்தியாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 29ஆம் தேதி உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்ள குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆயுதப்படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் அளிப்பதாகவும் வலியுறுத்தினார்.