தேர்தலில் ஒரு முறை போட்டியிடுவதே பெரும் விஷயமாக பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், 253 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Election King Padmarajan : சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த “தேர்தல் மன்னன்” என அழைக்கப்படும் டாக்டர் பத்மராஜன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தில், அவர் காலை 9 மணிக்கே தனது உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அலுவலக நேரம் இன்னும் தொடங்காததால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்காமல், 10 மணிக்கு பிறகு வருமாறு அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட பத்மராஜன், “அனுமதி கிடைத்தால் உடனே உள்ளே செல்வேன், இல்லையெனில் பின்னர் வருகிறேன்” என கூறி அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

பின்னர், காலை 10 மணிக்கு மீண்டும் வந்த அவர், தனது 253வது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வமாக மனுவை சமர்ப்பித்து, தேவையான உறுதிமொழிகளையும் மேற்கொண்டார்.

யார் இந்த பத்மராஜன்?

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெற்றி மட்டுமே சாதனை அல்ல; தோல்வியிலும் சாதனை உருவாக்கலாம் என்பதற்காகவே நான் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன்” என்றார். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே தனது முதல் வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவும், தற்போது 253வது மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 1996ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனுபவமும் தமக்குள்ளதாக கூறினார். தமிழக முன்னாள் முதல்வர்கள் முதல் தேசிய அளவிலான முக்கிய அரசியல் தலைவர்கள் வரை போட்டியிட்ட பல தொகுதிகளிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு மேட்டூர் தொகுதியில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றது தனது குறிப்பிடத்தக்க சாதனையாகவும் அவர் கூறினார். மேலும், அதிக தோல்விகளை சந்தித்த வேட்பாளராக லிம்கா சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்மராஜன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.