தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி, அதிரடி வாக்குறுதிகள், வரலாறு காணாத வாக்குப்பதிவு என விறுவிறுப்பாக அமைந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Record breaking voting in Tamilnadu Election : 2006-ம் ஆண்டு வெளிவந்த தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில், 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை அரசியல் கட்சிகள் மிக கவனமாக அணுகின. திமுக 11 கட்சிகளுடனும், அதிமுக 8 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து, களம் கண்டன. அதிமுக அணியில் இடதுசாரி கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல் திமுக அணியில், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன. எனினும் தொகுதி பங்கீட்டில், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கடும் இழுபறி நீடித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இறுதியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் தர திமுக சம்மதம் தெரிவித்தது. திமுக தனிப் பெரும்பான்மைக்கு கூடுதலாக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. அதாவது 119 தொகுதியில் போட்டியிட்டது. பாஜக, 204 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. மதிமுக இந்த தேர்தலை புறக்கணித்தது. விலைவாசி உயர்வு, 2ஜி முறைகேடு விவகாரம், மின்வெட்டு ஆகியவை இத் தேர்தலில் பேசுபொருளாகின. மேலும் இலவச அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் என இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசின.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக

இந்த தேர்தலில் 77.8 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் ஒரு சட்டமன்ற தேர்தலில் இவ்வளவு வாக்குகள் பதிவானது இதுவே முதன்முறையாகும். அதிமுக 160 இடங்களில் போட்டியிட்டு 150 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. திமுக வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றதால் அதற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, 29 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வென்ற நிலையில், ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

முந்தைய தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைத்த போது அதன் அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்கள் தோல்வியை தழுவினார்கள். ஜெயலலிதா 4வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 33 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. இந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளான இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை சொன்னபடி கொடுத்து நன்மதிப்பை பெற்றார் ஜெயலலிதா. இதன் காரணமாகவே இதையடுத்து நடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வென்று ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.