அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அதனை ஒரு படி மேலே கொண்டு சென்று, 10 சதவீதமாக உயர்த்துவோம் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தகித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிரடியைக் கிளப்பியுள்ளது. "மக்களுக்காக நாம், மக்களுடனேயே நாம்" என்ற தாரக மந்திரத்தோடு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சாமானிய மக்களைக் கவரும் வகையில் பல ‘மெகா’ அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘ஜில்’ அறிவிப்பு

இந்த தேர்தல் அறிக்கையின் சிகரமாகப் பார்க்கப்படுவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ஃபிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) வழங்கப்படும் என்ற அறிவிப்புதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழங்கிய மிக்சி, கிரைண்டர் திட்டங்களின் தொடர்ச்சியாக, பெண்களின் வீட்டுவேலை பளுவைக் குறைக்கவும், உணவுப் பொருட்களைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் புரட்சிகரமான 10% இடஒதுக்கீடு

அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அதனை ஒரு படி மேலே கொண்டு சென்று, 10 சதவீதமாக உயர்த்துவோம் என இபிஎஸ் அறிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க இந்த 2.5% கூடுதல் இடஒதுக்கீடு மிகப்பெரிய ஊக்கமருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000

தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகையை இரட்டிப்பாக்கி, மாதந்தோறும் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விலைவாசி உயர்வைச் சமாளிக்க அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக ₹10,000 ‘ஆறுதல் தொகை’ வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம். மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மகளிரைப் போலவே ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் விரிவாக்கப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹3,500 ஆகவும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹4,500 ஆகவும் உயர்த்தப்படும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு.

வெற்றி வாய்ப்பு எப்படி?

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்குப் போட்டியாகவும், விஜய்யின் அரசியல் வருகையால் ஏற்பட்டுள்ள இளைஞர் அலையை எதிர்கொள்ளவும் இந்த அறிக்கை மிகவும் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வி, மருத்துவம் மற்றும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகள், கிராமப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்களை அதிமுக பக்கம் ஈர்க்குமா என்பதே 2026-ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.