முத்ரா திட்டம் பற்றி பொய் பிரச்சாரம்: ப. சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதில்
முத்ரா திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொய் பிரச்சாரம் செய்வதாகச் சாடியுள்ளார்.
தொழில்முனைவோருக்குக் கடன் வழங்குவதற்கான மத்திய அரசின் முத்ரா திட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் சொல்லி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், திங்கட்கிழமை ட்விட்டரில் முத்ரா திட்டம் பற்றி விமர்சித்து பதிவிட்டார். அதில், “முத்ரா கடன் திட்டத்தின் கீழ், எட்டு ஆண்டுகளில் 23.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமாகத்தான் உள்ளது. அந்த கடன்களில் 83 சதவீதம் 50,000 ரூபாய்க்குக் கீழ் இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதாவது ரூ.19,25,600 கோடி தொகை ரூ.50,000 அல்லது அதற்கும் குறைவான அளவில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது ரூ.50,000 கடனில் இன்று என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்க வைக்கிறது” எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கள்ளத் தொடர்பைக் கண்டித்த மகனை கத்தியால் குத்திய தாயின் முன்னாள் காதலன்
ப. சிதம்பரத்தின் இந்தப் பதிவுக்கு பதில் கூறும் வகையில் பதிவிட்டிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் ப. சிதம்பரத்தின் ட்வீட்டை பொய்ப் பிரச்சாரம் என்று சாடுகிறார்.
அண்ணாமலை ட்வீட்:
முதலில், முத்ரா கடனைப் பற்றிய முன்னாள் நிதி அமைச்சரின் புரிதல் தவறானது; தவறான தரவுகளை அடிப்படையாக்க் கொண்டது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைப் போல, நிதி வழங்காதவர்களுடன் இதை ஒப்பிடக் கூடாது. முத்ரா கடன்கள் கடினமாக உழைக்கும் நடுத்தரக் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துபவை.
கடந்த 8 ஆண்டுகளில் (பிப்ரவரி 2023 வரை) வழங்கப்பட்ட கடன் தொகையின் அடிப்படையில் முத்ரா கடன்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஷிஷு: 41% (ரூ.50 ஆயிரம் வரை)
கிஷோர்: 36% (ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை)
தருண்: 23% (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை)
நானே டிரைவராக இருந்தபோதுதான் அந்த கஷ்டங்கள் புரிந்தன: மனம் திறக்கும் உபெர் சிஇஓ
வழங்கப்பட்ட மொத்த ஷிஷு கடன் 8.89 லட்சம் கோடி. மொத்தக் கடன்களில், 01.04.2016 முதல் தமிழக சகோதர சகோதரிகளுக்கு ரூ.2.02 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ரூ.2447 கோடி மதிப்பிலான கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இனிமேல் முன்னாள் நிதி அமைச்சர் தனது கோட்டையை விட்டு வெளியேறி முத்ரா திட்டத்தின் பயனாளிகளைச் சந்திப்பார் என்று உறுதியாக உள்ளோம். மேலும் முத்ரா கடன்களின் வாராக்கடன் கடந்த 7 ஆண்டுகளில் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே.
முன்னாள் நிதி அமைச்சர் ஒருவரே எப்படி இப்படிப்பட்ட பிழைகளைச் செய்திருப்பது, இது வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதற்கான முயற்சியா என்று யோசிக்க வைக்கிறது.
இவ்வாறு அண்ணாமலை தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாய் மூலம் குழந்தைகள் மூளையைப் பாதிக்கும் கொரோனா! ஆய்வில் தகவல்