கள்ளத் தொடர்பைக் கண்டித்த மகனை கத்தியால் குத்திய தாயின் முன்னாள் காதலன்
சென்னையில் தனது தாயின் முன்னாள் காதலனால் கத்தியால் குத்தப்பட்ட 17 வயது இளைஞர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதான சதீஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞர், சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார். இவரது தாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவரைப் பிரிந்துவிட்டார்.
அவருக்கு வேளச்சேரி கன்னியம்மன் கோயில் இரண்டாவது தெருவைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவருடன் அவரது தாயார் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கார்த்திக் வேலை பார்த்து வந்த தரமணியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் சென்றபோது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர். கார்த்திக் வீட்டிற்கு அடிக்கடி வந்து தன் தாயைச் சந்திப்பது பற்றி சதீஷ் வருத்ததில் இருந்திருக்கிறார். கார்த்திக்கை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளார். அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதால் நண்பர்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும் எடுத்துக்கூறியுள்ளார்.
மகனின் பேச்சினால் மனம் மாறிய தாய் கார்த்திக்கை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதைக் கேட்த கார்த்திக், தொடர்ந்து சதீஷ் வீட்டுக்குச் சென்றுவந்துள்ளார்.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு, சதீஷின் தாயார் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். அதன்படி கணவருடன் சென்று வாழத் தொடங்கினர். ஆனால் அங்கும் கார்த்திக் வரத் தொடங்கியதால் தம்பதியிடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகன் சதீஷ், தனது தாயிடம் இருந்து விலகி இருக்குமாறு கார்த்திக்கை எச்சரித்தார். சதீஷின் தாயும் இனி வீட்டுக்கு வந்து தொந்தரவு என்று கார்த்திக்கிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் சென்ற சனிக்கிழமை கார்த்திக் திரும்பவும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கார்த்திக்குடன் சண்டை போட்டு விரட்டினார். அங்கிருந்து சென்ற கார்த்திக் குடித்துவிட்டு போதையுடன் வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சதீஷை மூன்று முறை குத்திவிட்டு ஓடிவிட்டார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
சதீஷின் தாயும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சேர்ந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சதீஷுக்கு கத்திக்குத்து காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சதீஷின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.