ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை: விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கோவை முழுவதும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், வாக்கு சேகரிக்க வந்த அண்ணாமலைக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுத்துள்ளார். அப்போது, அண்ணாமலை அப்பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் தலைமை அழைப்பு!
இந்த நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் தந்ததாக வெளியான வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட வீடியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக கோவை தேர்தல் அதிகாரியும், அம்மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுப்பது வழக்கமான சம்பிரதாயம் என்றாலும் கூட, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது, அவ்வாறு பணம் கொடுப்பது ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு கீழ் நடத்தை விதிகளை மீறும் செயலாகும் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, கோவையில் தன்னை தோற்கடிப்பதற்காக திமுக அமைச்சர்கள் பலரும் இங்கு பணத்தை செலவழித்து வருவதாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்காமல் தான் ஜெயித்து காட்டுவதாகவும் அண்மையில் சவால் விட்டு அண்ணாமலை பேசியிருந்த நிலையில், ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.