ஓபிஎஸ், டிடிவி தினகரன் திமுகவின் பி டீம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் எதிராக உள்ளனர்.
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஒன்றாக சந்திப்பு
அதிமுக ஒன்றிணைய வேண்டும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை செங்கோடையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
இபிஎஸ் மதுரையில் பேட்டி
அப்போது அவர்கள் ''எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். உண்மையான தொண்டர்கள் அதிமுக ஒன்றிணைய விரும்புகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தனர். இதன்பிறகு தேவர் நினைவிடம் வந்த சசிகலாவையும் ஓபிஎஸ், டிடிவி சந்தித்து பேசினார்கள். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை கப்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஓபிஎஸ், டிடிவி திமுகவின் பி டீம்
அப்போது ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ், ''அதிமுகவுக்கு அவர்கள் துரோகிகள். ஓபிஎஸ், டிவிடி இருவரும் திமுகவின் பி டீம் ஆக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் போன்ற துரோகிகளால் தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
களை நீக்கப்பட்டு விட்டது
திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறும் ஓபிஎஸ் எப்படி அதிமுகவுடன் ஒன்றிணைய முடியும்? பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களை நீக்கப்பட்டு விட்டது. இப்போது அதிமுக என்னும் பயிர் செழித்து வளர்ந்து ஆட்சியை பிடிக்க போகிறது'' என்றார்.
செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா?
அப்போது அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், டிடிவியை சந்தித்த செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று இபிஎஸ்ஸிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் என்ற செய்தி விரைவில் வெளியாகும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
