- Home
- Tamil Nadu News
- ஓபிஎஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்.! ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்.! ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி
திமுகவை எதிர்க்க அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் எழுப்பினார். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்தது தொடர்பாக இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பலம் வாய்ந்த திமுக கூட்டணியை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அந்த வகையில் கூட்டணியை வலுப்படுத்த ஒரு பக்கம் முயன்று வரும் நிலையில், அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது. அப்போது தான் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதற்கான பணியை அதிமுக தலைமை எடுக்கவில்லையென்றால் தானே அந்த பணியை தொடங்குவேன் எனவும் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் கடும் கோவம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் அனைத்து பொறுப்புகளையும் பறித்து அறிவிப்பு வெளியிட்டார். அடுத்ததாக அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். இதனையடுத்து சிறிது காலம் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் மீண்டும் ஒருங்கிணைப்பு பணியை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து பசும்பொன்னில்செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ்- டிடிவி தினகரன்- செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தெரியவில்லை, வந்தால் தான் தெரியும், வந்ததும் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.