தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். உங்களை வரவேற்றால் அது எனது பாக்கியம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
OPS Letter Requesting Time To Meet PM Modi: பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 26ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மதுரை-போடிநாயக்கனூர் மின்மய ரயில் வழித்தடம், தூத்துக்குடி துறைமுக ஆறு வழிச்சாலை கூடங்குளம் அணுமின் நிலைய மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்பட ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் கடிதம்
இதன்பிறகு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்று அங்கு இரவில் தங்குகிறார். இதன்பின்பு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
உங்களை வரவேற்றால் எனது பாக்கியம்
இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், '''எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்'' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மோடியுடன் இபிஎஸ் சந்திப்பு
ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஓ,பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வேளையில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தால் அது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறும்.
