அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி, மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கம் இருப்பதாகக் ஓபிஎஸ் கூறினார். அதிமுகவில் இருந்து தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதாக மர்மமாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், கட்சி இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் எங்கள் பக்கம்
சென்னையில் இருந்து விமான மூலம் கோவையில் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை பெற தவறி விட்டார்கள், 7 தொகுதிகளில் டெபாசிட் போனது, 13 தொகுதிகளில் மூன்றாவது இடம் போனது, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெறும் 5000 வாக்குகள் மட்டுமே பெற்றது என தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், என்னை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தும் அதை மீறி 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளை பெற்றோம் என தெரிவித்தார். இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் எனக்கூறினார்.

அதிமுகவினர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஓபிஎஸ் விரக்தியில் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு, உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை, இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும், அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

ஈகோவை விட வேண்டும்
செங்கோட்டையனிடம்பேசிக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு, எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்னையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் அதுதானே உங்கள் எண்ணம் என தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் என மூன்று முறை சொன்ன அவர், அதுதான் ரகசியம் என்று சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார். அதிமுக இயக்கம் பிளவு பட்டு இருக்கிறது, தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு அம்மா ஆட்சி மலர வேண்டுமென்றால் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
2024ல் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிதி ஒதுக்கியதில் தமிழகம் விடுபட்டு இருப்பது குறித்து கேள்விக்கு, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது, மத்திய அரசு அந்த அளவுகோலின் படி எந்த மாநிலமாக இருந்தாலும் பாஜக நிதி ஒதுக்கும் எனவும் தெரிவித்தார்.
