திருச்சி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, விஜய் தனது அரசியல் எதிரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி மக்கள் சந்திப்பு குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட முப்பெரும் விழா தொடர்பான அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்' என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்திய திருச்சியில் தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று கதை பரப்பியவர்கள், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். தங்களது இந்த புலம்பலை, முப்பெரும் விழா கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். அதில் 'புதிய எதிரிகள்' என்று நேரடியாகப் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே பழந்தமிழ் மரபு?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:
"வாக்குறுதி தந்து வாக்குகளை வாங்கி, ஆட்சிக்கு வந்த பின்னர் ஏமாற்றியதால் உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியதா இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு? மாறாக, கைது செய்து தூக்கிச் சென்று அடக்கி ஒடுக்கித்தானே மகிழ்ந்தது?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கன்வாடி பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பரந்தூர் விவசாயிகள், சாம்சங் தொழிலாளர்கள், மீனவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்களை மதிக்காமல், அடக்குமுறையை ஏவிவிட்டதாக தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்துள்ளார்.
கொள்கை எதிர்ப்பு, பாஜகவுடன் ரகசிய உறவு?
வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும், உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.ஜி.ஆர். மீது வீசப்பட்ட அதே குற்றச்சாட்டுகள்:
"மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் 'வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?" என்றும் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.
2026-ல் புரட்சி வெற்றி:
"யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
