ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து!
ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மலை ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய மலை ரயில் ரத்து பயணிகளை பேருந்துகள் மூலம் ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மதியம் 2 மணி அளவில் மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை ரயில் புறப்பட்டது குன்னூர் வந்தடைந்ததும் மூன்று முப்பது மணி அளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல இருந்தது,
இந்நிலையில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து மொத்தம் 174 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் செல்ல புறப்பட்டபோது, ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கடைசி பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழ் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு மணி நேரம் ஆகியும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் அமர்த்த முடியாததால், பயணிகளை ரயில்வே நிர்வாகம் அரசு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தது. தொடர்ந்து பொக்லைன் உதவியுடன் தடம்புரண்ட ரயில் பெட்டியின் சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன.
முன்னதாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானது. அதில் 278 பேர் உயிரிழந்த நிலையில், ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஊட்டியின் பாரம்பரியமிக்கவைகளில் ஒன்று மலை ரயில். இந்த மலை ரயிலில் பயணம் செய்வது தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாகவே கருதப்படுகிறது. ஊட்டி மலை ரயிலானது, மலைகளின் அழகை ரசித்து கொண்டே பயணிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை தரும் என்பதால், சுற்றுலாப்பயணிகள் பெரும்பளவில் இந்த ரயிலில் பயணிக்க ஆசைப்பட்டு முன்பதிவு செய்து பயணிப்பர்.
பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்: டைம் கேட்ட ஸ்டாலின்!
வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி இடையேயான 46 கிலோ மீட்டர் தொலைவை சென்றடைய சுமார் 4.30 மணி நேரத்தை இந்த மலை ரயில் எடுத்து கொள்ளும். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 10.4 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்கும். இந்தியாவில் மெதுவாக செல்லும் ரயில்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஊட்டி மலை ரயில் தடம்புரண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.