பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்: டைம் கேட்ட ஸ்டாலின், கார்கே; கலந்து கொள்ளும் சரத் பவார்!
பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்
பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்மையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை தர முடியும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர சில கட்சிகள் விரும்பவில்லை. ஆனால், காங்கிரசை கழற்றி விட்டு எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அது பாஜகவுக்கு சாதகமாகப் போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் காங்கிரசுடன் இணைய விரும்பவில்லை.
ஆனால், இவர்கள் அனைவரையும்; அதாவது காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கி ஒரு குடையின் கீழ் இணைத்தால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியில் முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஈடுபட்டிருந்தார். தற்போது அந்த முயற்சியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை நிதிஷ் குமார் அண்மையில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் கூட்டம் தற்போது ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சுமார் 15 கட்சிகள் பங்கேற்கும் என பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகள்; களம் மாறிய தேவகவுடா; பலிக்குமா திட்டம்?
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ
Jவர் கூறுகையில், “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மனதில் கொண்டு அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதால், ஜூன் 12ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும், வேறு ஒரு தேதி கூட்டத்தை மாற்றுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதேசமயம், கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்களே பங்கேற்க வேண்டும். கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கக் கூடாது எனவும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, பல்வேறு தலைவர்களின் வசதிக்கேற்ப தற்போது ஜூன் 23ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஐக்கிய ஜனதாதளத் தலைவர் லாலன் சிங் இந்த தேதியை உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக, “இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்க அணி - UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.” என லாலன் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.