புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சார நிறைவு விழாவில், முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் கடன் சுமை, நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அவர் குற்றம் சாட்டினார்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வந்த ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற மாநிலந்தழுவிய பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா இன்று புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மெஹ்வால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடிப் பேசினார்.

"மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்"

விழாவில் உரையாற்றிய அண்ணாமலை, "தமிழகத்தில் இன்று சாதாரண டீ கடை, சலூன் கடை அல்லது ஆட்டோ பயணம் என எங்கு சென்றாலும், இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மேலோங்கியுள்ளது. திமுக அரசுக்கு இன்னும் 90 நாட்கள்தான் மிச்சமுள்ளது. மக்கள் இந்த ஆட்சியைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்," என்று கூறினார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், "மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு ‘தலைகாட்டி பொம்மை’ போலத் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர் காலத்தைக் கடத்தி வருகிறார்," என விமர்சித்தார்.

எகிறும் கடன் சுமை

திமுக அரசின் ஆட்சியில் தமிழர்களின் தனிநபர் கடன் அதிகரித்திருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“திமுக 2021ல் ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருவர் மீது உள்ள கடன் ரூ.2,04,000 ஆக இருந்தது. இப்போது அது 4,54,000 ரூபாயாக உயர்த்திருக்கிறது. ஒவ்வொருவர் மீது 2,50,000 ரூபாய் கடன் சுமை கூடியிருக்கிறது. 2021 முதல் பொங்கல் பண்டிக்கைக்கு என்று மொத்தம் 5,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு இரண்டரை லட்சம் ரூபாய் கடனை ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என அண்ணாமலை குறிப்பிட்டார்.

பொங்கல் பரிசு

“பொங்கல் பரிசு என்ற பெயரில் ₹5,000 கொடுத்துவிட்டு, ஒவ்வொரு தமிழன் மீதும் ₹2.5 லட்சம் கூடுதல் கடனை ஏற்றி வைத்துள்ளது இந்த அரசு," என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசிய அவர், "அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்துவிட்டு, அதில் 50% ஓய்வூதியமாகத் தருவோம் என்பது ஏமாற்று வேலை. இது இடது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வலது பாக்கெட்டில் வைப்பது போன்றது. இதில் அரசு ஊழியர்களுக்கு என்ன லாபம்?" என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் வாக்குறுதி சவால்

இறுதியாக, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, "505 வாக்குறுதிகளில் 50-ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாத முதல்வர், 80% பணிகளை முடித்துவிட்டதாகப் பொய் கூறுகிறார். அது உண்மை என்றால், ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்ட தேதியை அரசால் வெளியிட முடியுமா?" என நேரடி சவால் விடுத்தார்.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த விழாவால் புதுக்கோட்டை மாவட்டமே பாஜக தொண்டர்களின் எழுச்சியால் களைகட்டியுள்ளது.