புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் 'தமிழனின் பயணம்' நிறைவு விழாவில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என சூளுரைத்தார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வந்த ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற மாநிலந் தழுவிய பிரச்சாரப் பயணத்தின் பிரம்மாண்ட நிறைவு விழா இன்று (ஜனவரி 4, 2026) புதுக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மெஹ்வால் மற்றும் முரளிதர் மோகல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
நயினார் அனல் பறக்கும் உரை
நிறைவு விழாவில் தொண்டர்களிடையே உரையாற்றிய நயினார் நாகேந்திரன், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
"நான் சென்ற இடங்களில் எல்லாம், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் கோயில்களில் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகம் இன்று போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டது. வீட்டில் இருந்தாலும் பயம், வெளியே சென்றால் திரும்புவார்களா என்ற பயம் என மக்கள் அச்சத்திலேயே வாழ்கிறார்கள்."
3 மாத விரதம்
இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் வரை, இன்றிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் விரதம் இருப்பது போல அயராமல் பாடுபட வேண்டும்."
டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு காரணமான திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு.
திமுக ஒரு குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அமித் ஷா தலைமையிலான கூட்டணி மட்டுமே தமிழகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றார். மேலும், "தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கும் திமுக, போலியான மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கிறது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அமித் ஷா வருகை
இந்த மாநாட்டின் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது அதிரடிப் பிரச்சாரத்தை பாஜக முறைப்படித் தொடங்கியுள்ளது. பீகார் மற்றும் கேரளா உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றியைப் போல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் மலரும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.


