தனது சுற்றுப்பயணத்தின் போது கோவையில் வள்ளி கும்மி நடனம் ஆடிய நயினார் நாகேந்திரன், பொதுமக்களிடம் பேசுகையில், நானும், அண்ணாமலையும் சேர்ந்து தமிழக அரசியலில் வேறொரு ஆட்டத்தை ஆடப்போவதாக தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று கோவையில் சுற்றுப்பயணம் செய்த அவர் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்ன நினைத்து கூட்டணியை உருவாக்கினார்களோ அதனை வெற்றிகரமாக செய்து முடிக்க நானும், அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனிமேல் தான் இருக்கப் போகிறது. உத்தரபிரதேசத்தில் தமிழ் கற்றுக் கொடுக்க பிரதமரே உத்தரவிட்டுள்ளார். ஆனால் இங்கு தமிழ் தமிழ் எனக்கூறி தமிழை விற்கின்றனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு விடியல் இல்லை. மாறாக திமுவின் குடும்பத்தினருக்கு மட்டுமே விடிவு. நாங்கள் ஆடும் ஆட்டத்தை இனிமேல் தான் பார்க்கப்போகிறீர்கள்” என்றார்.

இதனிடையே நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மேற்கு தொடர்ச்சி மலையின் நிழலில்,விவசாய உழைப்பின் வாசனையோடும், தொழில் வளர்ச்சியின் சாத்தியங்களோடும் கோவை மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக திகழும் அழகிய கிணத்துக்கடவில்தான் இன்று நம் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” யாத்திரை மக்களின் பேராதரவோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது.

விவசாயம், கைத்தறி மற்றும் சிறு தொழில்கள், கோழிப்பண்ணை, பால் உற்பத்தி, கோவை–பொள்ளாச்சி நெடுஞ்சாலையைக் கொண்ட வணிகச் சந்தை வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் முக்கிய பங்களிப்பு வழங்கும் பகுதியாக கிணத்துக்கடவு இன்று வளர்ந்து நிற்கிறது.

ஆனால், இத்தனை உழைப்பும் பங்களிப்பும் அளிக்கும் இந்த வளமான பகுதியை, விடியா திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல், வெற்று விளம்பரங்களிலும் அரசியல் நாடகங்களிலும் மட்டுமே மூழ்கி கிடக்கிறது.

கிணத்துக்கடவில் குடிநீர் பிரச்சனை ஆண்டாண்டுகளாக தீர்வு காணப்படாத முக்கிய பிரச்சனையாகவே தொடர்கிறது.அமராவதி, ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டங்களின் நீர்ப்பங்கீடு முறையாக செயல்படுத்தப்படாததால், விவசாயமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வளமான பகுதியை வளர்க்க வேண்டிய அரசு, கிணத்துக்கடவை அலட்சியத்தின் விளிம்பில் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கெல்லாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு மக்கள் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.