கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

கள்ளிக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்திப் பள்ளியில் கடந்த 17 ஆம் தேதி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வன்முறை வெடித்தது. பள்ளியை முற்றுகையிடுவதாக பேரணியாக வந்த கும்பல், பள்ளி வாகனங்கள், மேஜை, நாற்காலி, மாணவர்களின் அசல் சான்றிதழ் போன்றவற்றிற்கு தீவைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி முற்றிலும் சேதமடைந்தது. 

சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளியை சீரமைப்பு செய்து மீண்டும் வகுப்புகள் தொடங்க குறைந்த 2 மாதங்கள் ஆகும் என்று கூறினார். மேலும் அதுவரை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க:அலர்ட் !! TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம்..

இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட சக்திப் பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூரில கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களும் நாளை மறுதினம் முதல் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது மூடப்பட்டுள்ள பள்ளிக்கு அருகிலேயே 3க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருவதால் அங்கு சக்திப் பள்ளி மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் அனைவரது கருத்தும் கேட்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வதற்காக பேருந்து ஏற்பாடும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:பள்ளி மாணவி தற்கொலை.. நைட் நல்லா தான் பேசுனா.. ஆனா காலையிலே எம்பிள்ளை உயிரோட இல்லை.. கதறும் பெற்றோர்..

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு எந்த பள்ளியில் பயில விருப்பம் தெரிவித்தாலும் அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார். இதனிடையே சேலம் டிஐஜி பிரவின்குமார் அபினவ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீதிமன்ற உத்தரவுபடி மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 23 ஆம் தேதி, இறுதிசடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.