கொரோனா பாதிப்பால் கோவையில் 65 வயது முதியவர் பலி.. தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..?
கொரோனா பாதிப்பு காரணமாக கோவையை சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்தார்.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதுவரை உருமாறிய கொரோனா மாறுபாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்புக்கு ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நெரிசலான இடங்களை தவிர்ப்பது, கைகளை கழுவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக 65 வயது முதியவர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த அந்த முதியவர் காய்ச்சல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக கடந்த 23-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களும் அவருக்கு இருந்தது. அவருக்கு ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. ஏப்ரல் 25-ம் தேதி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கடந்த செவ்வாய்க்கிழமை 470 பேருக்கும், புதன்கிழமை 421 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில், நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,312-ஆக உள்ளது.
கரூர், திருப்பத்தூர், பெரம்பலூர் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் 81 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும், சேலத்தில் 34 பேருக்கும், செங்கல்பட்டில் 24 பேருக்கும், திருப்பூர், கன்னியாகுமரியில் தலா 22 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்கங்களில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை.! மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்- கனிமொழி