சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் நிலத்தை கையப்படுத்தி தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? சீமான் கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

NTK chief coordinator Seeman has condemned the Tamil Nadu government over the Tirunelveli land acquisition issue vel

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் கங்கைகொண்டான், பல்லிக்கோட்டை, தென்கலம், தாழையூத்து, ஆகிய கிராமங்களில், ஏழை எளிய மக்களின் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி தனியார் பெரு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. தற்போது அதனினும் கொடுமையாக, நிலங்களை வழங்க மறுக்கும் பொதுமக்களின் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை காவல் துறையினரைக் கொண்டு மக்களை மிரட்டியும், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்தும், மும்பையைச் சேர்ந்த தனியார் சூரிய ஒளி மின்தகடு நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது.

தனியார் நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம், நிலங்களுக்கு இடையே உள்ள அரசு புறம்போக்கு நீர்த்தாரைகளையும், ஓடைகளையும் அழிக்கும் வேலைகளிலும், அப்பகுதியில் உள்ள பூர்வகுடி கோயில்களை இடித்து தனதாக்கிக் கொள்ளும் கொடுஞ்செயலிலும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக, தென்கலம் கிராம மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி கடந்த 11.12.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு மீதும் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

செலவுக்கு பணம் தராத தந்தையை வெட்டி கொன்ற மகன்; புதுக்கோட்டையில் பரபரப்பு

தாழையூத்து பகுதியில் வாழும் 20,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், மேய்ச்சல் நிலமாகவும், கால்நடைகளின் உணவு உற்பத்தி ஆதாரமாகவும், அருகில் உள்ள குளங்களுக்கு மழைநீரைக் கொண்டு சேர்க்கும் எண்ணற்ற ஓடைகளின் இருப்பிடமாகவும், பூர்வகுடி வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும், விவசாயிகளின் நிலங்களை, அடக்குமுறையை ஏவிவிட்டு அரசே பறித்து தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்ப்பது வெட்கக்கேடானது. அதுமட்டுமின்றி தனியார் பெரு நிறுவனங்களின் பொய் புகாரின் அடிப்படையில், நள்ளிரவில் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று காவல் துறையினர் அச்சுறுத்தி வருவது கொடுங்கோன்மையாகும்.

அரசுப்பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு

ஆகவே, தாழையூத்து அருகே தென்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் விவசாய நிலங்களை போலி ஆவணம் மூலம் செய்யப்பட்டுள்ள பத்திரப் பதிவுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து, நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதோடு, போலியான பத்திரப் பதிவு செய்த தனியார் சூரிய ஒளி மின்தகடு நிறுவனத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காவல்துறையினரால் பெண்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காகப் போராடிவரும் தென்கலம் கிராம மக்களின் உரிமை போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios