ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணிக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமமுக செயல் வீரர்கள் கூட்டம்

மதுரை புறநகர் மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: அமித்ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை முறை அமித்ஷா தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறுவது அவரது பயத்தின் வெளிப்பாடு. ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் பலமுறை உறுதி செய்துவிட்டார். அவருக்கு அனைத்து முக்கியத்துவமும் தரப்படுகிறது. அதிமுக மீட்பு என்ற பின்புலத்தில் சசிகலா செயல்படுகிறார். தேர்தல் நேரத்தில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

எங்கள் கூட்டணிக்கு தான் எடப்பாடி பழனிசாமி

அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவரின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை. எங்கள் கூட்டணிக்கு தான் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். எங்கள் பங்காளி சண்டையை ஓரம் வைத்துவிட்டு திமுகவை வீழ்த்திய பிறகு பார்த்துக்கொள்ளலாம். பாமகவில் அப்பா, மகனுக்குள் பிரச்சினை முடிந்து பழைய பலத்தோடு எங்கள் கூட்டணிக்கு வருவர். கூட்டணி கட்சி மாத்திரமல்ல புதிய கட்சிகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. Wait and See என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா சந்திப்பு குறித்து நான் அனுமதி கேட்டவில்லை

திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். மதுரைக்கு வந்த முதல்வரால் இந்த நகருக்கு என்ன நடந்தது? இந்த ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம். சாக்கடை கால்வாயை துணியை வைத்து மூடியது தான் மிச்சம். முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததை செய்திகளில் பார்த்தேன். திருச்சியில் முக்கியமான நிர்வாகிகளின் இல்ல திருமண விழா 4 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்துவிட்டனர். ஆகையால் அமித்ஷா சந்திப்பு குறித்து நான் அனுமதி கேட்டவில்லை என தெரிவித்துள்ளார்.