லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஹாஸ்டல் மீது விபத்துக்குள்ளானது. மாணவர்கள் உயிர் தப்பிக்க பால்கனிகளில் இருந்து கீழே குதித்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர், தரையில் இருந்தவர்களும் பலியாயினர்.
அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல் மீது லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அருகிலுள்ள ஹாஸ்டல்களில் இருந்த மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற பால்கனிகளில் இருந்து கீழே இறங்க முயற்சிக்கும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், விபத்தில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். தரையில் இருந்த சுமார் 30 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
உயிருக்குப் போராடிய மாணவர்கள்
இந்தியா டுடே தொலைக்காட்சிக்குக் கிடைத்த வீடியோக்களில், எம்.பி.பி.எஸ் மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளிலிருந்து கீழே இறங்க துணிகளை ஒன்றாகக் கட்டி, தீவிரம் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது. ஹாஸ்டல் கட்டிடத்தின் முன்புறம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் பீதியுடன் சத்தம் போடும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. சில மாணவர்கள் பெட்ஷீட்களைக் கொண்டு கயிறுகள் கட்டி கீழே இறங்க முயல்வதும், மற்றவர்கள் தப்பிப்பதற்காக பால்கனியின் கம்பிகளைப் பிடித்துக் கீழே இறங்குவதும் காணப்படுகிறது.
மற்றொரு வீடியோவில், கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்திருக்க, சிக்கித் தவித்த மாணவர்களைக் காப்பாற்ற ஒரு தீயணைப்பு வீரர் ஏணியின் மூலம் ஹாஸ்டலின் மூன்றாவது மாடிக்கு ஏறும் காட்சி பதிவாகியுள்ளது.
பயங்கரமான மதிய உணவு நேரம்
கடந்த ஜூன் 12 அன்று, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், 625 அடி உயரத்தில் இருந்து நிமிடத்திற்கு 475 அடி என்ற செங்குத்து வேகத்தில் கீழே விழுந்தது. விமானத்தின் வால் பகுதி மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலின் மெஸ்ஸில் மோதியது. அப்போது, பல மாணவர்கள் மதியம் 1:43 மணியளவில் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவாகவே அமைந்துள்ள இந்த ஹாஸ்டல் மெஸ்ஸில், ஏராளமான மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் அப்போதுதான் தங்கள் உணவை உட்கொள்ளத் தொடங்கியிருந்தனர். விமானத்தின் வால் பகுதி மோதியதில், ஒரு சாதாரண மதிய உணவு நேரம் ஒரு பயங்கரமான கனவாக மாறியது. இந்த விபத்து, விமானத்தில் இருந்த பயணிகளைத் தவிர, தரையில் இருந்த அப்பாவி மக்களின் உயிர்களையும் பலிவாங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.