அப்போ ஆளுநர் வேண்டாம்.! இப்போ வேண்டுமா.? விஜய்யை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ரவியைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். ஆளுநர் பதவி தேவையற்றது என்று முன்பு விமர்சித்த விஜய் தற்போது ஆளுநரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், இந்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என கட்சியின் பெயரை பதிவு செய்த விஜய், சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தார். இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டவர் கடந்த நவம்பர் மாதம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி கலக்கினார். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் கட்சிகள் போராட்டம்
இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை இன்று அளித்தார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆளுநர் பதவி தேவையில்லை அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கும் அந்த பதவியை நீக்க வேண்டும் என தெரிவித்த தவெக தலைவர் விஜய் இன்று திடீரென ஆளுநர் ரவியையே சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அப்போ ஆளுநர் பதவி தேவையில்லை. இப்போ ஆளுநர் பதவி தேவையா.? எனவும் ஆளுநர் பதவி இருந்தால் மட்டுமே ஆளும் அரசாங்கத்தை சரியான முறையில் வழி நடத்த முடியும் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வெளியே வந்த விஜய்
இதனிடையே விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு மழை வெள்ள பாதிப்பு, அரசியல் தலைவர்கள் நினைவு மற்றும் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பனையூர் வீட்டில் இருந்து மட்டுமே அரசியல் செய்வதாக விமர்சனத்திற்குள்ளான நிலையில் இன்று முதன் முறையாக ஆளுநர் ரவியை நேரடியாக சந்தித்து விஜய் கோரிக்கை மனு கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.