நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைப்பு. வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடந்து வருகிறது, சந்தேகத்திற்குரிய வினாத்தாள்கள் காவல்துறைக்கு அனுப்பப்படும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 106 கல்லூரிகள் இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இன்றைய தினம் நடைபெற இருந்த வணிகவியல் பாடத்தில் இண்டஸ்ட்ரியல் லா என்ற பாடப்பிரிவுக்கான தேர்வு வினாத்தாள் நேற்று இரவு கசிந்ததாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வினாத்தாள் கசிவு
இதனை தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. மேலும் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வினாத்தாள்கள் அனுப்பப்பட்ட மையங்களில் இருந்து திரும்ப பெறக்கூடிய பணி நடந்து வருகிறது. பெறப்படும் வினாத்தாள்களின் கட்டுக்களில் சந்தேகங்கள் இருந்தால் காவல்துறை விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
இன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்து விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 30 அல்லது 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
