விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையில் நடைபெறும் வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை அதிகப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விவசாயிகள் நலனில் அக்கறைகொள்வது போல் அரசியல் செய்யும் தாங்கள், 2021 தேர்தல் வாக்குறுதியில் உழவர் நலனுக்காகக் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை இன்னும் நிறைவேற்றாதது ஏன் என்று தான் புரியவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள வாக்குறுதிகளைத் தாங்கள் மறந்திருக்கலாம் என்பதால் தங்கள் கவனத்திற்கு அவற்றை தமிழக பாஜக சார்பாக பட்டியலிட்டுள்ளேன், படித்தறியுங்கள்!
வாக்குறுதி எண் 36 : இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனியே ஒரு பிரிவு.
வாக்குறுதி எண் 39 : கொடைக்கானலில் 390 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
வாக்குறுதி எண் 41 : சொட்டு நீர்ப்பாசன முறையை ஊக்குவிக்க 90 சதவிகித மானியம்.
வாக்குறுதி எண் 50 : ஒன்றியந்தோறும் தானியக் கிடங்குகள்.
வாக்குறுதி எண் 62 : தென்னை விவசாயிகள் சங்கம் மூலம் நீரா பானம் விற்பனை.
வாக்குறுதி எண் 80 : ஈரோட்டில் விவசாய இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
வாக்குறுதி எண் 89 : முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம்.
மேற்கூறிய அனைத்தும் வெறும் எடுத்துக்காட்டுகளே! இது போன்று உழவர் நலனைத் தூக்கி எறிந்து தாங்கள் கிடப்பில் போட்ட வாக்குறுதிகள் ஏராளம்! திமுக ஆட்சியில் தமிழக விவசாயிகள் எப்படி அவதியுறுகின்றனர் என்பதற்கு, நெல் கொள்முதல் செய்யப்படாத போது விவசாயிகள் சிந்திய கண்ணீரே உதாரணம்! எனவே, தாங்கள் விவசாயிகள் நலனில் அக்கறை இருப்பதுபோல காட்டிக்கொண்டாலும், மக்கள் ஏமாறப்போவதில்லை. உலகுக்கே உணவிட்ட உழவர் பெருமக்களைத் துன்பத்தில் உழலவிட்டு வயிற்றில் அடித்த திமுக அரசை விரைவில் விரட்டியடிப்பர். இது நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


