- Home
- Tamil Nadu News
- கோவை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி.. விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் ரூ.18000 கோடி
கோவை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி.. விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் ரூ.18000 கோடி
கோவையில் இன்று வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18000 கோடியை விடுவிக்க உள்ளார்.

வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
கோவையில் இன்று தொடங்கும் வேளாண் மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்களை விநியோகம் செய்பவர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
PM Kisan 21வது தவணை தொகை விடுவிப்பு
இந்த மாநாட்டின்போது நாடு முழுவதும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் விடுவிக்க உள்ளார்.
மோடியின் வருகை..
மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்துசேர்வார். பின்னர் சாலை மார்க்கமாக மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்குக்கு செல்கிறார்.
இயற்கை வேளாண்மை
மாநாடு தொடர்பாக தமது எக்ஸ் தளப் பதிவில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
ரூ.18000 கோடியை விடுவிக்கும் பிரதமர்
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் சுமார் 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

