ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், சந்தேகத்திற்கிடமாக வந்த பெண் மற்றும் இளைஞரை போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50,000 மதிப்புள்ள 908 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் கொண்ட சிறப்பு தனிப்படை குழு தேவதானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பெண் மற்றும் இளைஞரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு முரணான பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த பெண் வாலாஜாபேட்டை அருகேயுள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷினி (47) என்றும் அதேபோல் தேவதானம் ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (21) என்பதும் தெரியும் வந்தது. இதையடுத்து அவர்களிடம் சுமார் 50,000 ஆயிரம் மதிப்புள்ள 908 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது..
இதைத்தொடர்ந்து போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் மகனும், வாலிபரின் சகோதரரும் ஏற்கனவே இதேபோல் போதை மாத்திரை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும், தற்போது இந்த இளைஞர் வேலூர் பகுதியிலிருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து இந்த பெண்ணிடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் குற்றவாளியான சுபாஷினி மற்றும் இளைஞர் சுந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


