தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும். திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கும் தேமுதிக

இதனையடுத்து அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா ஒதுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறத்து. இதனையடுத்து தேமுதிக தரப்பில் எதிர்பார்த்து காத்திருந்தது. மேலும் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டியது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். 

ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ள 2 வேட்பாளர்களின் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. அதன் படி வழக்கறிஞரும் முன்னாள் எம்எல்ஏவுனாம இன்பதுரை, மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக சார்பாக வேட்பாளராக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.