பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினையில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

பாமக உட்கட்சி மோதலுக்கு பாஜக காரணமா.? தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் பாமகவும் தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணியானது தாவி வருவதாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனராக உள்ள ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவராக அன்புமணிக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பிய நிலையில், அன்புமணி பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

அன்புமணி- ராமதாஸ் மோதல் காரணம் என்ன.?

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல், பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது. இந்த நிலையில் தனது பேச்சை அன்புமணி கேட்கவில்லையெனவும் ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டை கூறியிருந்தார். அன்புமணி- ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு பாஜகவே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.

பாமக உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடாது

இதனை தொடர்ந்து பாமக தலைவர் மற்றும் நிறுவனர் இடையே மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.

 பாரதிய ஜனதா கட்சிக்கும் பாமகவின் உட்கட்சிப் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொடர்பும் கிடையாது, பின்னணியும் கிடையாது என உறுதியாக கூறினார். இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை. அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது எனவும் தெரிவித்தார். இந்த மோதல் விவகாரத்தை சமாதானம் செய்ய பாஜக முயற்சி எடுக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "உட்கட்சிப் பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.