பாஜகவில் வார் ரூம் அரசியல் செய்யக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்துள்ளார்.

TN BJP Leader Nainar Nagendran indirectly pressured Annamalai: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணிக்காக அதிமுக வைத்த நிபந்தனையின்பேரில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை அண்ணாமலை விரும்பவில்லை. இதை அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பலமுறை மறைமுகமாக கூறியுள்ளார்.

அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கு

நயினார் நாகேந்திரன் தலைவராக ஆன பிறகும் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலைக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. அண்ணாமலையில் ஆதரவாளர்கள் வார் ரூம்கள் மூலம் அதிமுகவை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 15 எக்ஸ் தள கணக்குகள் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இனி 'வார் ரூம்' அரசியல் செய்யக் கூடாது

இது நயினார் நாகேந்திரன் காதுகளுக்கு சென்றது. இந்நிலையில், கமலாலயத்தில் பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று கூறியதுடன் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிக்கக் கூடாது. கட்சியின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்ணாமலை ஆதரவாளர்களை கண்காணிக்க குழு

மேலும் தமிழக பாஜக, நிர்வாகிகள், தொண்டர்களின் சமூகவலைத்தள கணக்குகளை கண்காணிப்பதற்காக‌ Media Empower Network என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாஜகவினரின் சமூகவலைத்தள பதிவுகள், அவர்களின் பேச்சுகள் ஆகியவற்றை கண்காணிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பாஜகவில் இனி உள்கட்சி அரசியல் கூடாது. கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை இடுகையிடுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகவும் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளனர்.

அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் 15 எக்ஸ் தள கணக்குகள்

மேலும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் 15 எக்ஸ் தள கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ''பாஜகவிலோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளிலோ தனிப்பட்ட தலைவர்களை ஊக்குவிக்கவோ அல்லது மற்றவர்களை இழிவுபடுத்தவோ கூடாது. அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளும் கட்சியின் கூட்டு விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும், தனிப்பட்ட தலைவர்களை புகழும் வகையில் இருக்கக் கூடாது'' என்றும் பாஜக தலைமை உத்தரவிட்டதாக தெரிகிறது.

அண்ணாமலைக்கு செக் வைக்கும் நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரனின் இந்த உத்தரவு அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் செக் வைப்பது போல் அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தான் பாஜக தலைவராக ஆன பிறகும் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்குக்கு முடிவு கட்டவே நயினார் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அது என்ன 'வார் ரூம்' அரசியல்?

அண்ணாமலை தலைவராக இருக்கும்போது வார் ரூம் பாலிடிக்ஸ் என்ற புதிய அரசியலை முன்னெடுத்தார். பாஜகவின் சமூக வலைத்தள குழுக்களான இந்த வார் ரூம்மில் அண்ணாமலைக்கு எதிரானவர்களை விமர்சிப்பர்களை கட்சி நிர்வாகிகள் வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த வார் ரூம்கள் குறித்து காயத்ரி ரகுராம், சிடி நிர்மல் குமார் மற்றும் சூர்யா சிவா ஆகியோர் வெளிப்படையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.