neelankarai vijay house incident : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில், மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இருந்தும் மர்ம நபர் ஒருவர் மொட்டை மாடியில் பிடிபட்டார்.
Neelankarai vijay house incident : தமிழ் திரையுலகில் முன்னனி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் தமிழக மக்களை ஒவ்வொரு வாரமும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூர் மக்களை சந்தித்து பேசினார். நாளை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மக்களை சந்திக்கவுள்ளார். இதற்கான பணிகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர்
இந்த நிலையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்யின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சார்பாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மாலை நடிகர் விஜய் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் சாவகாசமாக மர்ம நபர் அமர்ந்திருந்துள்ளார். மர்ம நபர் விஜய்யை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், தனது ரசிகர் என தெரிந்து கொண்டு அவரை மெதுவாக வீட்டின் கீழே அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளார். இதனையடுத்து மருத்துமனையில் சிகிச்சையில் சேர்க்க விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மர்ம நபர் யார்.?
போலீசாரின் தொடர் விசாரணையில் விஜய் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற நபர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதும். வேளச்சேரியில் உள்ள தனது சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் தான் விஜய்யை பார்க்க தனியாக புறப்பட்டவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் வீட்டின் கோட்டை சுவர் மற்றும் கதவுகள் பல அடி உயரத்திற்கு இருக்கும் நிலையில் எப்படி வீட்டிற்குள் சென்று மொட்டை மாடிக்கு சென்றார் என விசாரித்து வருகின்றனர்.அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டின் பின் புறம் பகுதியில் உள்ள கேட் வழியாக சென்றது தெரியவந்துள்ளது. வீட்டின் மேல் பகுதிக்கு சென்றவர் ஒரு நாள் அங்கேயே தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
