பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகியுள்ளார். பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Mukundan Stepped Down PMK Youth Wing Leader Post: பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பாமக பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த முகுந்தன், தனது ராஜினாமா கடிதத்தை அன்புமணிக்கு அனுப்பி வைத்துள்ளார். அன்புமணி எங்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்று முகுந்தன் தெரிவித்துள்ளார்.
பாமக பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகல்
இது தொடர்பாக முகுந்தன் வெளியிட்ட அறிக்கையில், ''பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன் சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த முகுந்தன்?
பாமகவின் முக்கிய பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகிய நிலையில், அவர் யார்? என்று பாமகவினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஏனெனில் இப்போது ராமதாஸ், அன்புமணி இடையே பெரும் மோதல் ஏற்பட அச்சாரமாக கருதப்படுபவர் இந்த முகுந்தன் தான். ராமதாஸின் மகள்வழிப் பேரன் தான் முகுந்தன். பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக, முகுந்தனை ராமதாஸ் நியமித்தார்.
ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு முகுந்தன் காரணமா?
ஆனால் அந்த பொதுக்குழு மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். ''கட்சிக்கு வந்த 4 மாதத்திலேயே முகுந்தனுக்கு பதவி வழங்குவதா? அனுபவம் உள்ளவரை இளைஞரணி தலைவராக போடுங்கள்'' என்று அன்புமணி தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த ராமதாஸ், ''யார் யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் சொல்வதைத் தான் கட்சியினர் கேட்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது'' என்று அன்புமணியிடம் தெரிவித்தார்.
அன்புமணி மீது ராமதாஸ் கடும் விமர்சனம்
இதனைத் தொடர்ந்து ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் அதிகமானது. அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ், தானே கட்சியின் தலைவர் என அறிவித்தார். இதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதாக அன்புமணி கூறியிருந்தார். இதற்கு இன்று பதிலளித்துள்ள ராமதாஸ், அன்புமணி நாடகம் ஆடுகிறார் என்றும் அவர் தலைமைப் பதவிக்கு லாயக்கில்லாதவர் எனவும், அவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
