ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணியின் மேடை நாகரீகம் குறித்தும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கடந்த ஒரு மாதமாக எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை. என் மனதிற்குள் பல கேள்விகள் எழுகிறது. நான் என்ன தப்பு செய்தேன். ஏன் நான் மாற்றப்பட்டேன். என் கனவு, என் லட்சியம் எல்லாமே, அவர் என் நினைத்ததைதான் நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ அதைத்தான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம். வெற்றி பெறுவோம். நமது முதல் வெற்றியே வருகிற 2026 வெற்றியாக இருக்கும் என அன்புமணி உருக்கமாக பேசியிருந்தார்.

மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்

இந்நிலையில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன் என ராமதாஸ் கூறி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில்: நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயலாகும். உண்மையில் தவறு செய்தது அன்புமணி அல்ல. நான் தான். எனது சத்தியத்தை மீறி 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்தேன்.

மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்?

தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆட தொடங்கியது அன்புமணி தான். புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன். எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகந்தனை நியமனம் செய்தேன். முகந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்த போது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியாக செயலா? அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியது போல் இருந்தது. பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன் அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை.

தாயை அடிக்க முயன்றவர் அன்புமணி

கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி ஏறிந்தார். அன்புமணி எறிந்த பாட்டில் அவரது அம்மா மீது படவில்லை என ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அன்றே செத்துவிட்டேன்

அன்புமணி கூசாமல் பொய் சொல்வார் உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குவதாக அவர் கூறியது பொய். தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானம் அல்ல. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்த கொண்டபோதே நான் செத்து போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை அன்புமணி தடுத்துவிட்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.