ரேடார் இணைப்பு துண்டிப்பு; அரி கொம்பன் யானையை வலை வீசி தேடும் வனத்துறை அதிகாரிகள் - பீதியில் கிராம மக்கள்
ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரிகொம்பன் யானையை 80க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் குறிப்பாக தேனி மாவட்டத்திலும் மிகவும் அட்டகாசம் செய்து வந்த அரி கொம்பன் யானை வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் யானையின் கழுத்தில் ரேடார் கருவி பொருத்தப்பட்டு நெல்லை மாவட்டம் முண்டந்துறை அருகே விடப்பட்டது. யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறு அணை பகுதியில் வந்து தஞ்சம் அடைந்தது.
யானையை கண்காணிக்க குமரி மாவட்ட வனத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட நூறு நாட்களை எட்டிய நிலையில் கடந்த சில நாட்களாக அரி கொம்பன் யானை தினசரி 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு சென்று கடந்த இரு தினங்களாக அங்கு தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த மரங்களை சேதப்படுத்தியதோடு வரதன் என்பவருடைய வீட்டின் கதவை தள்ளி மேல் கூறையையும் சேதப்படுத்தி உள்ளது.
இயக்கப்படாத அரசுப் பேருந்து; உயிரை கையில் பிடித்துக் கொண்டு லாரியில் பயணிக்கும் மலை கிராம மாணவர்கள்
அதன் அருகே உள்ள பள்ளிக்கூடம் அருகையும் அது வந்து சென்றதை வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே அரி கொம்பன் யானை மீண்டும் தன்னுடைய அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை வாழ் மக்களும் பீதி அடைந்துள்ளனர். அதன் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அது இருக்கும் இடம் தற்போது கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யானையை தென் மாவட்ட வன ஊழியர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இன்று முதல் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதனை தேடும் பணிகளையும், கண்காணிப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியதால் குமரி மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.