டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், வகுப்புவாத சக்திகளின் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு புலனாய்வு அமைப்புகள் இடம் கொடுக்க கூடாது.

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வகுப்புவாத சக்திகளின் கற்பனை குற்றச்சாட்டுகளை புலனாய்வு அமைப்புகள் அனுமதிக்க கூடாது என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்கள் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நாட்டின் தலைநகரமான டெல்லியில் அப்பாவிகள் பலரின் உயிரைக் குடித்த, பலருக்குப் படுகாயத்தை ஏற்படுத்திய கொடூர சம்பவத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது.

இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அக்கொடூரர்கள் மீது உரிய தண்டனை பெற்றுத்தர ஒன்றிய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், நாட்டின் அமைதியை குலைக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் அரங்கேறியுள்ள இந்நிகழ்விற்கு, உள்துறையும், உளவுத்துறையும் கையில் வைத்துள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்விவகாரத்தை மொழி ரீதியாக, மத ரீதியாக திசை திருப்பாமல், தேவையற்ற எதிர்ப்பார்ப்புகளை உருவாக்காமல், மூளையாகச் செயல்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அப்பாவிகள் மீது குறி வைக்கப்படாமலிருப்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். டெல்லி கார் குண்டு வெடிப்பு விவகாரத்தை வைத்துக்கொண்டு, சமூக வலைதளங்களில் வகுப்புவாத சக்திகள் பல்வேறு கற்பனை குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், தீவிரவாதிகள் போல் சித்தரித்து வருகின்றனர்.

தீவிரவாதம் என்பது இந்து, கிறிஸ்துவம், இசுலாமியம், பௌத்தம் என அனைத்து மதங்களிலும் இருக்கிறது. அதற்காக, தவறுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை சிந்திக்காமல், ஒட்டுமொத்தமானவர்களையும் குற்றவாளிகளாக சித்தரிப்பது என்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, வகுப்புவாத சக்திகளின் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கோ, மத ரீதியான பாகுபாட்டிற்கோ, புலனாய்வு அமைப்புகள் அனுமதிக்கக்கூடாது.

இந்த மாதிரி நெருக்கடியான நிலையில், இந்திய ஒன்றியத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒன்று பட்டு நிற்பார்கள் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆறுதலை கூறிக்கொள்கிறேன். காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப, இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.