மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா, பாக்டீரியா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி. இவரது மகள் கருணாம்பிகா பிரபல கட்டிட கலை நிபுணர் மற்றும் கல்வியாளர். ‘தி இந்தியன் பப்ளிக் பள்ளி குழுமத்தின் இணை நிறுவனர். இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார் பிரபல தொழிலதிபர். கடந்த நாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். கருணாம்பிகா - அசோக்குமார் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கருணாம்பிகா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் பாக்டீரியா தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் பல உறுப்புகள் செயல் இழந்ததால் கருணாம்பிகா (54) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை இரங்கல்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், அக்கா சரஸ்வதி அவர்களின் அன்பு மகளும், ஆற்றல் அசோக் குமார் அவர்களது மனைவியுமான, கருணாம்பிகா குமார் அவர்கள், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. இந்தத் துயரிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு அருளட்டும். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

உடலுக்கு அஞ்சலி செலுத்திய வானதி சீனிவாசன்

அதேபோல் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் கருணாம்பிகா குமார் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கருணாம்பிகா குமார் மறைவையொட்டி அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் இரங்கல்

நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி அவர்களின் புதல்வியும், இந்தியன் பப்ளிக் பள்ளி நிறுவனர் ஆற்றல் அசோக் குமார் அவர்களின் மனைவியுமான கருணாம்பிகா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் டாக்டர். சி. சரஸ்வதி அம்மா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.